ந்த உலகம் மிகப்பெரியது. காடு, மலை, கடல் என்று பரந்து கிடக்கிறது. கடல்நீரால் சூழப்பெற்ற இந்த பூமி பல கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கண்டமும் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. நமது இந்தியா ஆசியா கண்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்த நாடு மாநிலங்களாகவும், மாவட்டங்களாகவும், வட்டங்களாகவும், கிராமங் களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறிய, பெரிய தெருக்கள், அந்தத் தெருக்களில் சிறிய, பெரிய வீடுகள்.

Advertisment

இந்த வீடுகளில் ஒரு சிறு அறையிலிருந்து கொண்டு நமது வாழ்க்கையை நடத்துகிறோம். இந்த உலகத்தின் மிகப் பெரிய பரப்பில் நாம் இருக்கும் இருப்பிடம் எவ்வளவு சிறியது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். இத்தனை சின்னஞ்சிறிய இடத்தில் இருந்தவாறு மனிதர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்தான் எத்தனை?

dd

ஒரு பெரிய இடத்தைக்காட்டி, "இந்த இடம் முழுவதும் என்னுடையது' என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஏன்- "இந்த நாடே என்னுடையதுதான்' என்று சொல்லித் திரிகிறார்கள். உண்மையில் இந்த பூமி யாருடையது? இது இறைவனுக்குச் சொந்தமானது. மனிதன் உயிரோடு இருக்கும்வரை இந்த பூமியை அனுபவிக்கலாம். அவன் இறந்துவிட்டால், அதை அடுத்தவன் அனுபவிக்க இறைவன் கொடுக்கிறான். எனவே, நம்முடையதென்று எதுவுமில்லை. இறைவன்மட்டுமே எல்லாருக் கும் சொந்தம்.

ஒரு நாட்டு அரசன் மக்களில் ஒருவனை அழைத்து, ""நீ இந்த நாட்டில் எவ்வளவு தூரம் சுற்றிவருகிறாயோ அவ்வளவு நிலத்தை உனக்குக் கொடுத்துவிடுகிறேன்'' என்றான்.

அந்த மனிதனும் தன்னால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஓடினான்.

மேன்மேலும் சுற்றிச் சுற்றி ஓடினான். ஒரு நிலையில் அவனுக்கு மூச்சுத் திணறியது. தலைசுற்றியது. கண்கள் இருண்டன. தளர்ந்து போய் தள்ளாடிக் கீழே விழுந்தான். பிறகு அவன் எழவில்லை. உயிர் பிரிந்துவிட்டது. இப்போது அவனுக்குத் தேவை ஆறடி நிலம் மட்டும்தான்.

இப்பொழுதெல்லாம் நிலத்தின்மீது மக்களுக்குத்தான் எவ்வளவு ஆசை! விளை நிலத்தையெல்லாம் வீடாக்கிக்கொள்கிறார் கள். ஏரி, குளத்தையெல்லாம் கையகப்படுத்திக் கொள்கிறார்கள். தனக்குச் சொந்தமில்லாத நிலத்தைக்கூட தன் நிலமென்று சொல்லி ஏமாற்றி விற்றுப் பணம் பார்க்கிறார்கள். இருக்கக்கூட இடமில்லாமல் தவிப்பவர் எத்தனையோ பேர். அதேசமயம் தனி ஒருவனுக்கென்று எத்தனையோ சொந்த வீடுகள்! அத்தனையும் பெரிய பெரிய மாளிகைகள்!

ஒருசமயம் பூமாதேவியானவள் பரமேஸ்வரனிடத்தில் சென்று கண்ணீர் வடித்து, ""எனக்கு இந்த பூமியின் சுமை தாங்க முடியவில்லை. எனது தோள்கள் வலிக்கின்றன. உடல் தளர்ந்து போய்விட்டது'' என்றாள்.

""பூமியில் மக்கள் பல அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்களே!

அதனால் சுமை தாங்க முடியவில்லையா?''

""இல்லை.''

""தண்ணீருக்காகப் "போர்வெல்' போட்டு உன்னைக் குடைந்தெடுக்கிறார்களே...

அதனாலா?''

""இல்லை...''

""உன்னைப் பிரித்துக் கூறுபோட்டு விற்பனை செய்கிறார்களே! அதனாலா?''

""இல்லை.''

""இப்படி எதுவுமில்லையென்றால் உனக் கேன் இவ்வளவு தாங்கமுடியாத சுமை?'' என்றார் பரமேஸ்வரன்.

""ஈசனே! எனக்கு இவையெல்லாம் சுமையாக இல்லை. இந்த பூமியில் மக்கள் செய்யும் அநியாயம், நேர்மையின்றி நடந்துகொள்ளுதல், பொய் பேசுதல், ஏமாற்றுதல், கொலை, கொள்ளை போன்ற அவலங்களே எனக்குப் பெருஞ்சுமையாக உள்ளன. அதிலும் என்னை அபகரிக்க அவர்கள் செய்யும் அநீதிகளைக் கொஞ்சம்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை தெய்வமென்றே நினைப்பதில்லை. இதுதான் எனக்கு சுமையாக உள்ளது'' என்றாள் பூமாதேவி.

பூமாதேவியைப்போல் பொறுமையானவள் யாருமில்லை. அவள் ஒருநாள் பொங்கியெழுந்து பெரும் நிலநடுக்கம் வந்தால் நம் நிலைமை என்ன? கட்டிப்போட்ட அடுக்குமாடிக் கட்டடங்களின் நிலை என்ன? சேர்த்துவைத்த சொத்துகள் என்னவாகும்?

ஒரு "ரியல் எஸ்டேட்'டுக்கு சொந்தக்காரர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஆஞ்சனேயரைத் தொடர்ந்து துதித்துவந்தார். அவரைப் பார்த்து ஒருவர், ""நீங்கள் தீவிர ஆஞ்சனேயர் பக்தரா?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த "ரியல் எஸ்டேட்' சொந்தக்காரர், ""நான் ஆஞ்சனேயரிடம் வேண்டுதலை வைத்துப் பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார்.

""என்ன பிரார்த்தனை?'' என்றார் அவர். அதற்கு, ""என் "ரியல் எஸ்டேட்' அருகில் ஒரு பெரிய மலை இருக்கிறது. ஆஞ்சனேயரே, நீர் எப்படி சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றீரோ அப்படி இந்த மலையையும் தூக்கிச் சென்றுவிடுங்கள். இந்த மலை இல்லையென்றால் எனக்குப் பல "ஏக்கர்' நிலம் கிடைக்கும். அதை நான் "பிளாட்' போட்டு விற்றுவிடுவேன். இதற்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.

மண்ணாசை எப்படியெல்லாம் மனிதனை மாற்றுகிறது? பூமாதேவியின் புலம்பல் நமக்கு இப்போது நன்றாகவே புரிகிறது.